அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவதால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது


அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவதால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 8:32 PM GMT)

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவதால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என மன்னார்குடியில் வைகோ பேசினார்.

சுந்தரக்கோட்டை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு வைகோ வந்தார். பின்னர் அவர் பெரியார் சிலை சந்திப்பு அருகில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது 7½ கோடி தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தும் வேளையில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட முயற்சிப்பதை கண்டும் காணாமல் மத்திய அரசு உள்ளது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும். அதை யாராலும் தடுக்க முடியாது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர். போலீசாரை வைத்து போராட்டங்களை அடக்க பார்க்கின்றனர். அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகங்களை அமைதியான வழியில் முற்றுகையிட்டு போராட வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்கள் இயங்காத நிலையை ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள் அமைந்தால் மத்திய அரசு நெருக்கடியை உணர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரும். அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவதால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story