பரமத்திவேலூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்


பரமத்திவேலூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 9:03 PM GMT)

பரமத்திவேலூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் ஆனது. இதற்காக இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பொத்தனூர் பகுதியில் திடீர் என சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. இதில் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், குமார், ரவி, ஜெகநாதன், குப்புசாமி, ராஜா, சின்னத்தம்பி, செல்வம் உள்ளிட்டோர் பயிர் செய்திருந்த வாழை மரங்கள் சேதம் ஆனது.

இழப்பீடு வழங்கக்கோரிக்கை

சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் வரை இருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வெற்றிலை கொடிகளும் சேதமடைந்தது.இது குறித்து வாழை மற்றும் வெற்றிலை கொடிக் கால் விவசாயிகள் கூறும்போது, சூறாவளிக்காற்றில் சேதம் அடைந்த வாழை, வெற்றிலைக்கு உரிய இழப்பீட்டுத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும், என்றனர். வாழை, வெற்றிலை சேதமானது பொத்தனூர் பகுதி விவசாயிகளிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story