சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது: மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு


சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது: மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 15 May 2018 3:30 AM IST (Updated: 15 May 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய மகள் படுகாயம் அடைந்தார்.

திருவள்ளூர்,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மாந்தோப்பு கிராமம் பழையகேசவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(வயது 33). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி (30) என்ற மனைவியும், லட்சிதா(5) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் சதீஷ், தனது மகள் லட்சிதாவுடன் மோட்டார் சைக்கிளில் பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு நோக்கி மேட்டுமோநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் தந்தை–மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிசிக்சை பலன் இன்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகள் லட்சிதா மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கண்லூர் கிராமத்தைச்சேர்ந்தவர் சின்னையா(65). இவர், நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்காடு கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வேர்காடு கிராமத்தில் உள்ள சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது கும்மிடிப்பூண்டியில் இருந்து கவரைப்பேட்டை நோக்கிச்சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் சின்னையா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story