3 நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் கிராம மக்கள் மனு


3 நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

குடிநீருக்காக 1 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. 3 நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கலெக்டரிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கொ.வல்லுண்டான்பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. 3 மாதங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. இதனால் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக அலைச்சல் ஏற்படுவதுடன் எங்களது வேலைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், சூரக்கோட்டையில் மக்கள் பயன்பாட்டிற்காக அம்பலகாரன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் இந்த ஏரியை ஆக்கிரமித்துள்ளார். இதை எதிர்க்கும் கிராமமக்களை மிரட்டுகிறார். எனவே ஆக்கிரமிப்பாளரிடம் உள்ள ஏரியை மீட்டு, தூர்வார வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் பின்னையூரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில், உஞ்சிய விடுதி, சில்லத்தூர், வெட்டிக்காடு ஆகிய கிராமங்களில் 15 மீட்டர் நீளம், 7.9 மீட்டர் அகலத்தில் கிராம சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. இதே நீள, அகலத்துடன் தான் தமிழகம் முழுவதும் கிராம சேவை மையத்திற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் பின்னையூரில் ரூ.17 லட்சம் மதிப்பில் 8.75 மீட்டர் நீளம், 4.78 மீட்டர் அகலத்தில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே நீங்கள்(கலெக்டர்) நேரில் ஆய்வு செய்து மற்ற கிராமங்களில் கட்டப்பட்டுள்ளதை போன்றே கிராம சேவை மையத்தை கட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Next Story