காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. செல்வராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில கட்டுபாட்டுக்குழுவை சேர்ந்த பாண்டியன், விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி, விவசாய சங்கத்தை சேர்ந்த சம்பந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஆற்றுமணல், தாதுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆகிய திட்டத்தை கைவிட வேண்டும்.

30 பேர் கைது

விவசாய நிலங்களை அழித்து நாகை மாவட்டத்தை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சீர்காழி ஒன்றிய செயலாளர் பிரபாகரன், இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த ஜெயசக்திவேல், செந்தில்குமார், பழனிவேல், சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த 30 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story