ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் மனு


ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 May 2018 4:39 AM IST (Updated: 15 May 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

சாலை வசதி செய்து தரக்கோரி ஊட்டியில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். கோத்தகிரியை அடுத்த பாரதிநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

பாரதிநகர் பகுதியில் நடைபாதை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குண்டும், குழியுமான பாதையை பொதுமக்களே சரிசெய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் பாரதிநகருக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டவளை பகுதியில் இருந்து பாரதி நகருக்கு சாலை வசதி செய்து தரக்கோரி வருகிற 18–ந் தேதி கோத்தகிரி–ஊட்டி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். ஆகவே, சாலை வசதி ஏற்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ஊட்டி காந்தல் ஸ்லேட்டர்ஹவுஸ் பகுதியில் நகராட்சி இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து மின் இணைப்பு பெற்று உள்ளார். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, மின் இணைப்பு வழங்க நகராட்சி மூலம் எந்தவித சான்றிதழும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவலில் நகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கிய தடை இல்லா சான்று மற்றும் வரிச்சான்று மூலமே மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப் பட்டு இருந்தது. 2 துறைகளும் மாறுபட்ட கருத்து கூறுவதால் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூரில் இந்து முன்னணி சார்பில் பேனர் வைத்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்து பேனரை அகற்ற வேண்டும் என்றனர். ஆனால், ஊட்டியில் அரசியல் கட்சியினர் நகராட்சி அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைத்து உள்ளனர். எனவே போலீசார் பாரபட்சமாக செயல்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.


Next Story