மணமேல்குடி பகுதியில் பலத்த மழை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


மணமேல்குடி பகுதியில் பலத்த மழை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 16 May 2018 4:15 AM IST (Updated: 16 May 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி அடைந்தனர். இதனால் மணமேல்குடி பகுதியில் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோக நடந்து வந்தது. மேலும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி, காரக்கோட்டை, தினையாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்தநிலையில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழையால் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய ஏற்றதாக இருந்தது. மேலும் இந்த பலத்த மழையால் அதி காலையில் மீன்பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

மழையவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு பின்வருமாறு:- மீமிசல்-1.20, ஆவுடையார்கோவில்-8.20, மணமேல்குடி-45, கட்டுமாவடி-12. 

Next Story