ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்


ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 May 2018 10:30 PM GMT (Updated: 15 May 2018 9:30 PM GMT)

ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 7-வது மாநாடு நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அகவி தலைமை தாங்கினார். தேவன்பு, திரவியராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் மாநாடு தொடக்க உரையாற்றினார். செல்வபாண்டியன், எட்வின் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநாடு நிறைவாக மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் பேசினார். கலை இலக்கிய பண்பாடு மற்றும் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தாக்கல் செய்தார். அறிக்கை மீதான விவாதமும், சங்கத்தின் புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

சுற்றுலா மையம் அமைக்க வேண்டும்

மாநாட்டில், தாய்மொழி கல்வியை பாழடிக்கிற தமிழக அரசின் ஆங்கில வழி ஆரம்ப பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மழலையர் தாய்மொழி பள்ளிகளை அரசு உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை புனரமைத்து சுற்றுலா மையம் அமைத்து அரசு பராமரிக்க வேண்டும். பெரம்பலூர் மக்களின் கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஏற்ற வகையில், அரங்கத்துடன் கூடிய திறந்தவெளி மைதானத்தை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராமர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக மாநாட்டில் சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் இசை, கவிதை, நாடகம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story