மாவட்ட செய்திகள்

பலத்த மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு + "||" + Heavy Rain: Water to Hogenkal 3 thousand cubic feet per second

பலத்த மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

பலத்த மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,

தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ் அருவிகளும் உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர், ஒகேனக்கல் வழியாக தான் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரையில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் காவிரி ஆற்றின் அழகை பரிசலில் சென்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் களை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.