அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 May 2018 4:15 AM IST (Updated: 16 May 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

சின்னத்தும்பூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் சின்னத்தும்பூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகை மாலி கலந்து கொண்டு பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். சின்னத்தும்பூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிமணி, பாஸ்கரன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேளாங்கண்ணி - கிராமத்துமேடு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வழிப்பறி மற்றும் விபத்துகள் நடைபெறுகிறது. எனவே இந்த சாலையை உடனே சீரமைத்து, மின் விளக்குகள் அமைப்பதுடன், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

சின்னத்தும்பூர் ஊராட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு சாலைகளையும் சீரமைக்க வேண்டும். ஆலமழை - மயான சாலை மற்றும் வடக்குத்தெரு சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். பெரியத்தும்பூர் - பாலக்குறிச்சி சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட சின்னத்தும்பூர் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வேளாங் கண்ணி - கிராமத்துமேடு சாலையை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைக்கப்படும். மேலும், மற்ற கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story