தஞ்சையை சேர்ந்த பெண் போலீஸ் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை


தஞ்சையை சேர்ந்த பெண் போலீஸ் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2018 4:45 AM IST (Updated: 16 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையை சேர்ந்த பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதற்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்,

தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி(வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், விழுப்புரத்தில் பயிற்சி முடித்து விட்டு, தஞ்சை மற்றும் சென்னையில் பணியாற்றினார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.

வைஷ்ணவிக்கும், மன்னார்குடி மான்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இவர்கள் அரியலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தற்போது வைஷ்ணவி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக சென்ற வைஷ்ணவி, திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், உடனடியாக வைஷ்ணவியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் அரியலூர் போலீசார், வைஷ்ணவி அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story