பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்


பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
x
தினத்தந்தி 16 May 2018 5:02 AM IST (Updated: 16 May 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை எதிர்கொள்ளுமாறு பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்து உள்ளார்.

மும்பை,

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடகாவில் இனிமேல் ‘அச்சே தின்’(நல்ல நாட்கள்) மலரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பா.ஜனதாவினருக்கு தங்கள் மீது நம்பிக்கை இருக்குமானால் ஒரே ஒருமுறை வாக்குச்சீட்டு முறையில் அவர்கள் தேர்தலை சந்திக்க வேண்டும். இது அனைவரின் சந்தேகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்’ என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபின் அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘ஒருவர் சில நேரங்களில் வெற்றியையும், சில நேரங்களில் தோல்வியையும் சந்திக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்’ என பதிலளித்தார்.

இந்தநிலையில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை வாக்குப்பதிவு எந்திரத்தின் வெற்றி என விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story