காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஆந்திராவுக்கு அழைத்து செல்ல திட்டம்?


காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஆந்திராவுக்கு அழைத்து செல்ல திட்டம்?
x
தினத்தந்தி 16 May 2018 5:05 AM IST (Updated: 16 May 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு அவர்களை ஆந்திராவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று(புதன்கிழமை) பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து காலை 8.30 மணியளவில் நடக்கிறது. இதில் சித்தராமையா, பரமேஸ்வர் உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதே போல் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் ஆட்சி அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்பவனுக்கு சென்று, கவர்னர் முன்பு அணிவகுப்பு நடத்துகிறார்கள்.

இதன் மூலம் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை கவர்னருக்கு குமாரசாமி தெரிவிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்ல காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பஞ்சாப், ஆந்திரா அல்லது கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story