பட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி வாலிபர் கைது


பட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 3:45 AM IST (Updated: 17 May 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

குலுக்கல் முறையில் எல்.இ.டி. டி.வி. தருவதாக கூறி பட்டறை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர், மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அலுமினிய கதவு செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனியின் கடைக்கு வந்த ஒரு வாலிபர், அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேச்சு கொடுத்தார். அப்போது அந்த வாலிபர், குலுக்கல் முறையில் எல்.இ.டி. டி.வி. தருவதாகவும், அதற்கு உடனே ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அதனை கேட்ட பழனி, அந்த வாலிபரிடம் தற்போது பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி. எப்போது தருவீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ரூ.5 ஆயிரத்தை தன்னிடம் கொடுத்துவிட்டு மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெருவில் உள்ள ஒரு பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு உடனே வரும்படி கூறினார்.

தப்பி சென்றார்

இதை நம்பி பழனி, ரூ.5 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு அவர் பின்னால் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அந்த வாலிபருடன் கடைக்குள் சென்ற பழனி, டி.வி மாடல்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பழனிக்கு தெரியாமல் அவரை ஏமாற்றிவிட்டு ரூ.5 ஆயிரம் பணத்துடன் அந்த வாலிபர் கடையில் இருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பழனி, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இந்தநிலையில் மயிலாடுதுறை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சித்தர்காடு பகுதியில் மொபட்டில் வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாபநாசம் தாலுகா ராஜகிரி பகுதியை சேர்ந்த பக்கீர்முகமது மகன் அப்துல்ரகுமான் (வயது 35) என்பதும், அவர் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்த பழனியிடம் நூதன முறையில் ரூ.5 ஆயிரம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், அப்துல்ரகுமானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Next Story