மானாமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள நீடிக்கும் தடை கட்டுமான பணிகள் பாதிப்பு
மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள நீடிக்கும் தடையால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
மானாமதுரை,
மானாமதுரை நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் பழைய வீடுகள் ஆகும். இவற்றில் அடிக்கடி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறும். பெரிய அளவிலான கட்டுமான பணிகளுக்கு லாரிகளில் மணல் தேவை. ஆனால் சிறு, சிறு பணிகளுக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும் மணலே போதுமானதாக இருக்கும். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை இருப்பதால் சிறு, சிறு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மானாமதுரை நகரில் குடியிருப்புகளும் தற்போது பெருகி வருகின்றன. கட்டுமான தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரை பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லை. விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. போதிய மழை இல்லாததால் விவசாய கூலி தொழிலாளர்கள் பலரும் கட்டுமான தொழிலுக்கு வந்துவிட்டனர். மானாமதுரையில் 75–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். மணல் அள்ள தடை நீடித்து வருவதால் பொருளாதார ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது விவசாய பணிகளும் கிடையாது. சுமைகளை ஏற்ற மோட்டார் வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். மாட்டு வண்டிகளை யாரும் பயன்படுத்துவதே இல்லை. எனவே பொதுப்பணித்துறை சார்பில் வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.