மணல் குவாரிக்கு நிரந்தர தடை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு


மணல் குவாரிக்கு நிரந்தர தடை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு
x
தினத்தந்தி 17 May 2018 4:00 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் தமிழக அரசு புதிய மணல் குவாரி தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் தமிழக அரசு புதிய மணல் குவாரி தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் ஒன்றிய மக்கள் கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு உருவாக்கி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கருத்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து போராட்டங்கள் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4-ந் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு மணல் குவாரி தொடங்கியது. இதையறிந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். பின்னர் பல்வேறு போராட்டங்கள், 3 நாட்கள் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தினர். அப்போது கையெழுத்து பெறப்படும் படிவங்கள் ஆளுனர், தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 9-ந் தேதி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு ஜூன் 5-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், மணல் குவாரிக்கு நிரந்தர தடை உத்தரவு கிடைக்க வேண்டி கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் திருமானூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் தனபால், முருகானந்தம், கைலாசம், சீமான், திருவேங்கடம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story