மாவட்ட செய்திகள்

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது + "||" + In Salem Thunder, lightning Heavy rain; Water broke into 20 houses

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஆனால் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழையால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் சேலத்தில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மாலை வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாநகரில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க இருசக்கர வாகனங்களில் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் குடைகள் பிடித்தவாறும், தலையில் துணிகளை போட்டுக்கொண்டும் சென்றனர். சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அதேபோல் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

இந்த வீடுகளில் தேங்கிய தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இதனால் அவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் போது வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே சென்று வந்தனர். சேறும், சகதியுமாக உள்ள சாலைகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.