ஊட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு


ஊட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவை மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் கடந்த 1857-ம் ஆண்டு உருவாக்கினார். இங்கு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைகள், மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 1896-ம் ஆண்டு மே மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. இங்குஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி உலகளவில் பிரசித்தி பெற்றது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாடங்கள், மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக நேற்று ஊட்டிக்கு வந்தார். ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் முன்னாள் அமைச்சர் புத்திச் சந்திரன் தலைமையில் தொண்டர்கள் மற்றும் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தனர். அங்கு முதல்-அமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து படுகர் இன மக்களிடம் வணக்கம் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகைக்கு வந்தார். தமிழகம் மாளிகை முன்பு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவலிங்கம், நிஷாந்தி ஆகியோர் தலைமையில் செண்டை மேளம் முழங்க காவடியாட்டம் மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.

மேலும் பார்வதி, கிருஷ்ணன், மதுரை மீனாட்சி அம்மன் போன்று கடவுள் வேடமணிந்த கலைஞர்கள் நடனம் ஆடி வரவேற்றனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் மாளிகையில் தங்கி உள்ளார். அவருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரும் தங்கி உள்ளனர்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

Next Story