ஐம்பொன் சாமி சிலைகள் கடத்தல் வழக்கு: கைதானவர்கள் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்


ஐம்பொன் சாமி சிலைகள் கடத்தல் வழக்கு: கைதானவர்கள் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 17 May 2018 10:45 PM GMT (Updated: 17 May 2018 9:47 PM GMT)

பேரணாம்பட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சாமி சிலை கடத்தல் வழக்கில் கைதானவர்கள் ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவில் நிர்வாகத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது.

ஆம்பூர்,

பேரணாம்பட்டு அருகே சாமி சிலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் சாமி சிலைகளை கடத்திய பேரணாம்பட்டு அருகே அரவட்லா கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், ஆறுமுகம் மற்றும் மாதனூர் அருகே அகரம்சேரி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான வள்ளி, தெய்வானை, முருகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ஐம்பொன் சிலைகள் மாதனூர் அருகே பூமாலை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரும் குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சாமி சிலைகள் திருட்டு சம்பவம் நடந்த இடம் ஆம்பூர் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். ஏற்கனவே பூமாலை கோவிலில் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் சம்பந்தமான வழக்கு ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் ஆம்பூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 3 பேரும் நேற்று ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 31-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி ஜி.ரூபனா உத்தரவிட்டார்.

கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

இதனிடையே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் பூமாலை முருகன் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐம்பொன் சிலைகளை பெற்று கொண்ட கோவில் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் அதனை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினர்.

மேலும் சிலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story