சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல்


சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் மூலம் மத்திய அரசின் 30 சதவிகித மானியத்துடன் கூடிய சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சூரிய சக்தி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் பெற தகுதியுடையவர்களான தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் விடுதிகள் ஆகிய கட்டிடங்களில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் வழங்குகிறது.

இதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் 1,000 வாட் முதல் 5,000 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனத்தை அமைத்துக்கொள்ளலாம். 1,000 வாட் சூரிய சக்தி மின்சார அமைப்பின் மூலம் ஒரு நாளுக்கு 4 யூனிட் முதல் 4.5 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதற்கான விலை ரூ.60,000 என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு 30 சதவிகிதம் ரூ.18,000 மானியம் வழங்குகிறது. சூரிய சக்தி மின்சாரத்தை அமைப்பவர்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்திற்கு அனுப்பப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவது குறைக்கப்படுகிறது. மின்சாரம் சேமிக்கப்படுகிறது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் கார்டு நகல், மின்கட்டண ரசீது நகல், 1 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் உதவி பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, 2-ம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் நேராகவும், www.teda.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 770080 64710, 7708064635 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி பொறியாளர் (தமிழ்நாடு எரிசக்தி முகமை) மற்றொரு செந்தில், தனியார் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களது உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story