வெண்ணாற்றில் மணல் திருட்டை தடுக்க 11 இடங்களில் ராட்சத பள்ளம் தோண்டினர் அதிகாரிகள் நடவடிக்கை


வெண்ணாற்றில் மணல் திருட்டை தடுக்க 11 இடங்களில் ராட்சத பள்ளம் தோண்டினர் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2018 10:30 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

வெண்ணாற்றில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் மாட்டு வண்டி, லாரி, டிராக்டர் செல்ல முடியாத அளவிற்கு 11 இடங்களில் ராட்சத பள்ளம் தோண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு கல்லணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்து விடப்படும். தற்போது தண்ணீர் இல்லாததால் ஆறுகள் வறட்சியாக காட்சி அளிக்கிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு வெண்ணாற்றில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. மாட்டு வண்டிகள், டிராக்டர், லாரிகள் மூலம் அதிக அளவில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தும் வருகிறார்கள். மேலும் மணல் திருட்டில் ஈடுபடும் மாட்டு வண்டிகள், டிராக்டர், லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

மேலும் வெண்ணாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசில் தொடர்ந்து புகார் அளித்தும் வருகிறார்கள். அதையும் மீறி ஆங்காங்கே மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மணல் திருட்டை தடுக்க, மணல் அள்ளுவதற்காக வாகனங்கள் செல்லும் பாதையில் ராட்சத பள்ளம் தோண்ட முடிவு செய்தனர்.

அதன்படி வெண்ணாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் அசோகன் உத்தரவின் பேரில் தஞ்சை வெண்ணாறு வடிநில உபகோட்டத்தில் மட்டும் 11 இடங்களில் மணல் அள்ளுவதற்காக செல்லும் வழித்தடத்தில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. உதவி செயற்பொறியாளர் வரதராஜன், உதவி பொறியாளர் ரமாபிரபா ஆகியோர் மேற்பார்வையில் பொக்லின் எந்திரம் மூலம் இந்த ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளன.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், களக்குடி, அண்ணா தோட்டம், கோனூர், சேதுராயன் படுகை, கோவத்தக்குடி, கொத்தங்குடி, நெம்மேலி, காந்தாவனம், கோட்டூர், களஞ்சேரி ஆகிய 11 இடங்களில் வெண்ணாற்றுக்கு செல்லும் சாலையில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ளன. இதன் மூலம் லாரிகள், டிராக்டர், மாட்டு வண்டிகள் வெண்ணாற்றுக்கு சென்று மணல் அள்ள முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story