பயிர்களை ஆராய மத்திய அரசு அதிகாரிகள் குழு வருகை


பயிர்களை ஆராய மத்திய அரசு அதிகாரிகள் குழு வருகை
x
தினத்தந்தி 17 May 2018 11:58 PM GMT (Updated: 17 May 2018 11:58 PM GMT)

மாநிலத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆராய மத்திய அரசு அதிகாரிகள் குழு வருகை புரிந்துள்ளது.

மும்பை,

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பூச்சி தாக்குதல்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பருத்தி பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தற்கொலையும் அதிகரித்தது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக மாநில அரசு தரப்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டது. இந்தநிலையில் மாநிலத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் குறித்து ஆய்வு செய்ய புது டெல்லியில் இருந்து மத்திய அரசு அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது. இந்த அதிகாரிகள் தாக்கல் செய்யும் ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும்.

முதலில் அவுரங்காபாத் மாவட்டத்தில் தங்களது பணியை தொடங்கும் மத்திய அரசு அதிகாரிகள், பின்னர் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பூச்சி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். கடைசியாக இந்த குழுவினர் மும்பையில் மாநில அதிகாரிகளை சந்தித்தபின் புது டெல்லிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாநில விவசாயத்துறையின் முதன்மை இயக்குனர் பிஜய் குமார் கூறியதாவது:-

பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை ஆராய்வது வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைதான். மத்திய அரசிடம் ரூ.1,221 கோடி நிதி உதவிக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தங்களது முழுமையான ஆய்வறிக்கையை சமர்பித்தபின் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story