தனியார் மருத்துவமனை வளாகத்தில் தொழில் அதிபர் குத்திக்கொலை


தனியார் மருத்துவமனை வளாகத்தில் தொழில் அதிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 18 May 2018 5:30 AM IST (Updated: 18 May 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் தொழில் அதிபரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவருடைய காரிலேயே தப்பிச்சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பழனி

பழனி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவிராஜா (வயது 60). இவர் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பழனி ராஜேந்திரா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரவிராஜாவிடம் டிரைவராக சென்னையை சேர்ந்த சந்துரு (25) என்பவர் வேலை பார்த்தார். இவர் தான் காரில் ரவிராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வார்.

இந்த நிலையில் சந்துருவின் சில நடவடிக்கைகள் ரவிராஜாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரை வேலைக்கு வரவேண்டாம் என ரவிராஜா கூறிவிட்டார். வேலையை இழந்த ஆத்திரத்தில் இருந்த சந்துரு அவரை பழிதீர்க்க முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை வழக்கம் போல் ரவிராஜா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காரில் செல்வதை சந்துரு பார்த்தார். உடனே அவருடைய காரை பின் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றார். இதற்கிடையே ரவிராஜாவை தாக்குவதற்காக கத்தியை வாங்கிய சந்துரு அதனை தனது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு ரவிராஜா வெளியே வந்தபோது அங்கு மறைந்திருந்த சந்துரு அவரை வழிமறித்தார். தொடர்ந்து கண்இமைக்கும் நேரத்துக்குள் அவரின் கழுத்து, இடுப்பு மற்றும் காலில் கத்தியால் சரமாரியாக குத்தினார். வலியால் ரவிராஜா அலறித் துடிக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சந்துரு அங்கிருந்து ஓடி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரவிராஜாவின் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரவிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே பழனி போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூர், கோவை மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சந்துரு சிக்கினார். அவர்கள் அவரை கைது செய்து பழனி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story