பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி


பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி
x
தினத்தந்தி 19 May 2018 4:30 AM IST (Updated: 19 May 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின விவசாயிகள் நீர்பாசன வசதிக்காக மானியத்துடன் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின விவசாயிகள் நீர்பாசன வசதி ஏற்படுத்தி கொள்ள மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் வரை மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சாதிச்சான்றிதழ், வருமானசான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நில உடமைக்கு ஆதாரமான கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய சிறு, குறு விவசாயிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story