செல்போனை திருடிய வாலிபர், ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு


செல்போனை திருடிய வாலிபர், ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 19 May 2018 5:45 AM IST (Updated: 19 May 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்களை பிடிக்க முயன்ற ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒரு வாலிபர் சிக்கினார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் நள்ளிரவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படாத நேரத்தில் பயணிகள் நடைமேடைக்கு செல்ல அனுமதியில்லை. அதனால் பயணிகள் ரெயில் நிலைய வளாகத்தில் இருப்பது உண்டு.

இந்நிலையில் நேற்று அதிகாலை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் கள் யோகேஷ்குமார், ரத்தன்லால் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போன் காணவில்லை என புகார் கூறினார்.

இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கு இடமாக திரிந்தவர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். உடனே கூட்டத்தில் இருந்த 4 வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றனர். அதை கண்ட யோகேஷ்குமார், ரத்தன்லால் ஆகியோர் அவர்களை பிடிக்க முயன்றனர்.

திடீரென அவர்களில் ஒரு வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் யோகேஷ்குமாரின் தலையில் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த ரத்தன்லால், யோகேஷ்குமாரை தாக்கிய வாலிபரை பிடித்தார். அதற்குள் மற்ற 3 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். தலையில் காயம் அடைந்த யோகேஷ்குமாரை அங்கு இருந்தவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் யோகேஷ்குமாரை அரிவாளால் வெட்டியது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த விஜய் (வயது 21) என தெரியவந்தது. அவரிடம் இருந்து அரிவாள், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் யோகேஷ் குமார் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை நேரத்தில் ரெயில்வே போலீஸ்காரரை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story