கர்நாடக சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கிறது?


கர்நாடக சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கிறது?
x
தினத்தந்தி 19 May 2018 12:11 AM GMT (Updated: 19 May 2018 12:11 AM GMT)

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கிறது? என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் இன்று(சனிக்கிழமை) எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து நேற்று சட்டசபை செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

15-வது கர்நாடக சட்டசபை நாளை(அதாவது இன்று) காலை 11 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுவாக புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் நிகழ்வு முடிவடைய 2 நாட்கள் வரை ஆகும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், மாலை 4 மணிக்குள் இந்த நிகழ்ச்சி முடிக்கப்படும். மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். முதல்-மந்திரி எடியூரப்பா, தனது அரசை ஆதரிக்க கோரி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்வார்.

அதன் அடிப்படையில் இந்த நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சபாநாயகர் சொல்வார். அப்போது, ஆதரவு தெரிவித்து எழுந்து நிற்பவர்களின் ஒவ்வொருவரின் பெயரும் எழுதி கொள்ளப்படும். அதன் பிறகு தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுவார்.

அப்போது எழுந்து நிற்பவர்களின் பெயர்கள் எழுதிக் கொள்ளப்படும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபை அரங்கு கதவுகள் மூடப்படும். அதன்படி எண்ணிக்கை கூட்டப்படும். இந்த சட்டசபை கூட்டம் குறித்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் செல்போன் எண்ணுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூர்த்தி கூறினார். 

Next Story