பாதாள சாக்கடை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


பாதாள சாக்கடை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 5:01 AM GMT (Updated: 2018-05-19T10:31:05+05:30)

பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிப்பகுதியில் ரூ.55 கோடி செலவில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நகராட்சியின் அனைத்து வீதிகளிலும் குழிதோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு கழிவுநீரை பவானி ஆற்றங்கரையோரத்திற்கு கொண்டுசென்று, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து பவானி ஆற்றில் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அய்யப்பன்கோவில் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கூத்தனூர் ஆர்.எம்.பி.நகர் மேற்குப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்திலிருந்து சத்தி நகராட்சியில் குடியிருப்புகளுக்கு குடிநீர் எடுக்குமிடம் சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று பவானி ஆற்றில் இறங்கி நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாளசாக்கடை திட்டம் வேண்டாம் என்று கோ‌ஷம் போட்டனர். மேலும் உடனடியாக பாதாளசாக்கடை திட்டப்பணிகளை நிறுத்தவேண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினார்கள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கூறும்போது, ‘சத்தி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை. ஆற்றிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி இல்லை. ஏற்கனவே இப்பகுதி ‘ரெட் அலர்ட்‘ என்று சொல்லக்கூடிய சிவப்பு வளையத்திற்குள் வருவதால் இங்கு இப்பணியை மேற்கொள்ளக்கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதையும் மீறி தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் எந்த நகராட்சியும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முன்வராத நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் வேண்டுமென்ற இத்திட்டம் திணிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோபி நகராட்சி, பவானி நகராட்சி ஆகிய இரு நகராட்சிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்காமல் இங்கு மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு என்ன காரணம்?. பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள விதிகளின் படி அமைப்பதற்கு நகராட்சி தயக்கம் காட்டுவதோடு கழிவுநீரை ஆற்றில் கலக்குவதற்கு முயற்சிப்பது சத்தியமங்கலம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். எனவே இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும்‘ என்றார்.


Next Story