கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு தேர்வு: உள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 15 சதவீத மதிப்பெண் வழங்க வேண்டும்


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு தேர்வு:  உள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 15 சதவீத மதிப்பெண் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 19 May 2018 8:30 PM GMT (Updated: 19 May 2018 2:53 PM GMT)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு தேர்வில் உள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 15 சதவீத மதிப்பெண் வழங்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வலியுறுத்தி உள்ளார்.

வள்ளியூர், 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு தேர்வில் உள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 15 சதவீத மதிப்பெண் வழங்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

போலி குடியுரிமை சான்றிதழ் பெற்று... 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2–வது அணு உலைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். முதல் மற்றும் 2–வது அணு உலைகளில் ஏற்பட்ட வேலைவாய்ப்பில் 50 சதவீத பணியிடங்களில் உள்ளூர் மக்களை பணி அமர்த்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவற்றில் 95 சதவீதம் பேர் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் போலியான குடியுரிமை சான்றிதழ்கள் பெற்று, மோசடியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக குடியுரிமை சான்றிதழ் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மகராஷ்டிரா மாநிலத்தில் 15 ஆண்டுகளும், கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளும், கர்நாடக மாநிலத்தில் 7 ஆண்டுகளும், ஆந்திர மாநிலத்தில் 6 ஆண்டுகளும், தமிழகத்தில் 5 ஆண்டுகளும் இருக்க வேண்டும் என்பது அந்தந்த மாநில அரசுகளின் விதிமுறை ஆகும். ஆனால் அவர்களுக்கு அந்த இடத்தில் சொந்தமான நிலபுலன்கள் இருக்க வேண்டும். அந்த நபர் குறிப்பிட்ட இடத்தில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

15 சதவீத மதிப்பெண் வழங்க... 

ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மோசடியாக குடியுரிமை சமர்ப்பித்து வேலைவாய்ப்பு பெற்றவர்கள், இந்த அரசு விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. அவ்வாறு மோசடியாக குடியுரிமை சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்தவர்களை நீக்கி விட்டு, உள்ளூர் மக்களை பணி அமர்த்த வேண்டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய 3 மற்றும் 4–வது அணு உலைகளில் தேவையான 222 பணியிடங்களுக்கு இந்தியாவின் மற்ற அணு உலைகளில் பணியில் இருந்தவர்களை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பணி மாறுதல் செய்வதற்கான நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து, கடந்த 27–3–2018 அன்று எனது (அப்பாவு) தலைமையில் கூடங்குளத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தொடர்ந்து 222 பணிகளுக்கும் ஆள் எடுப்பதற்கு உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த வேலைவாய்ப்பிலும் தாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி 50 சதவீதம் உள்ளூர் மக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர், எழுத்து தேர்வில் உள்ளூர் மக்களுக்கும், நிலம் கொடுத்தவர்களுக்கும் 15 சதவீத மதிப்பெண் அளித்து உள்ளார். அதேபோன்று தாங்களும் எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் உள்ளூர் மக்களுக்கும், நிலம் கொடுத்தவர்களுக்கும் 15 சதவீதம் அதிக மதிப்பெண்கள் வழங்கி, அதன் அடிப்படையில் உள்ளூர் மக்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story