பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு


பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 May 2018 9:15 PM GMT (Updated: 2018-05-20T01:00:49+05:30)

பொள்ளாச்சியை அருகே அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு நடந்தது. இதில் தனியார் நிறுவன துணை மேலாளர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி இ.பி. நகரில் வசித்து வருபவர் கமலகண்ணன் (வயது 40). தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு கஞ்சம்பட்டியில் உள்ளது. அங்கு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்று விட்டனர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கமலகண்ணன், வேலை முடிந்ததும் கஞ்சம்பட்டியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை இ.பி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்தது கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.மேலும் பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம் (65) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமி உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவில் பொருட்கள் எதுவும் உள்ளதா? என்று தேடி பார்த்தனர். பீரோவில் இருந்து 2 வெள்ளி டம்ளர், ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றனர். அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவங்கள் மாக்கினாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story