பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தாக்கி கொலை


பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தாக்கி கொலை
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 8:08 PM GMT)

பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காளிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மூத்த மகன் கார்த்தி (வயது 27). இவர் ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை படையப்பா நகர் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு சென்ற பொதுமக்கள் சிலர் அங்கு ரத்தக்காயங்களுடன் வாலிபர் கார்த்தி பிணமாக கிடப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமியும் அங்கு வந்தார். இதற்கிடையில் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் கார்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது கார்த்தியின் தலையின் பின்பகுதி மற்றும் தலையின் உச்சியில் கல்லால் கொடூரமாக தாக்கிய ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அத்துடன் அருகில் ரத்தக்கரை படிந்த கல் கிடந்தது. மேலும் கார்த்தியின் முகத்தை பெரிய கல்லில் கொண்டு மோதியதால் முகத்தில் காயங்களும் காணப்பட்டன. யாரோ மர்ம ஆசாமிகள் இவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம்பிடித்தபடி சுமார் ½ கிலோமீட்டர் தூரம் உள்ள குருவாயுரப்பன் நகர் வரை ஓடிவிட்டு மீண்டும் கார்த்தியின் உடல் கிடந்த இடத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு கார்த்தியின் தந்தை ராஜூ வந்தார். அவர் மகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர் கார்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது தொடர்பாக கார்த்தியின் தந்தை ராஜூவிடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பரமசாமி விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எனது (ராஜூ) சொந்த ஊர் திருப்பூர்–தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஆகும். எனது மகன் கார்த்தி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று பல்லடம் ரோடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

இதனால் மனமுடைந்த கார்த்தி அன்று முதல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். சரியாக வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு செலவுக்கு பணம் தராமலும் சுற்றித்திரிந்தார். தினமும் நண்பர்களுடன் குடித்து விட்டு வருவது வழக்கம். சில நாட்கள் வீட்டிற்கே வராமல் நண்பர்கள் வீட்டில் தங்குவதும் உண்டு. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றுவிட்டு 2 வாரத்துக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்னர் வரவில்லை. நான் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டேன். தற்போது தகவல் கிடைத்ததும் இங்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் கார்த்தி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். அத்துடன் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story