குமாரபாளையம் அருகே லாரியை திருடிச்சென்றவர் அடித்துக்கொலை


குமாரபாளையம் அருகே லாரியை திருடிச்சென்றவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-20T02:58:43+05:30)

குமாரபாளையம் அருகே, லாரியை திருடிச்சென்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமெண்டு பாரங்கள் ஏற்றிச்செல்ல 500-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. இந்த லாரிகள், நிறுத்தத்தில் இருந்து அடிக்கடி திருட்டுபோனதால் அனைத்து லாரிகளுக்கும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தபட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கவுண்டனூர் பகுதியினை சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி திருட்டு போனது. உடனடியாக ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் தேடியபோது, அந்த லாரி குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியினை மீட்ட டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் அந்த லாரியின் உள்ளே படுத்திருந்த வீ.மேட்டூர் பகுதியினை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவரை அழைத்துக்கொண்டு லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு வந்தனர். பின்னர் அவரை லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரியை திருடிச்சென்றவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story