துறைமுகம் திட்டத்துக்கு எதிர்ப்பு குறும்பனை, சைமன் காலனியில் ஆர்ப்பாட்டம்


துறைமுகம் திட்டத்துக்கு எதிர்ப்பு குறும்பனை, சைமன் காலனியில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 4:15 AM IST (Updated: 20 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

துறைமுகம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை, சைமன் காலனியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சல்,

குமரி மாவட்டம் இனயத்தில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த துறைமுகம் கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடையே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கடல் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குளச்சல் அருகே குறும்பனையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு குறும்பனை புனித இன்னாசியார் ஆலய பங்குதந்தை கஸ்பார் தலைமை தாங்கினார். பங்கு பேரவை நிர்வாகிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். குறும்பனையில் வாகனங்கள் செல்லாதவாறு தடைகளை ஏற்படுத்தினர்.

இதுபோல், துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைமன்காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புனித யூதா ஆலய பங்குதந்தை ஜான் சிபி தலைமை தாங்கினார். இதில் பங்கு மக்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துறைமுகம் திட்டத்தை கைவிட கோரி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

Next Story