திருச்சியில் பயங்கரம்: மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை


திருச்சியில் பயங்கரம்: மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2018 10:15 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

திருச்சி ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஜினிகுமாரி(வயது 33). இவர் கல்லுக்குழி சுப்பராயன் தெருவில் வசித்து வருகிறார். ரஜினிகுமாரியின் கணவர் ரஞ்சித்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை ரஞ்சித்குமார், ரஜினிகுமாரி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ரஜினிகுமாரியை சுட்டார். இதில் ரஜினிகுமாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அப்போது ரஞ்சித்குமார் துப்பாக்கியால் தன்னுடைய தலையில் சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடிய ரஜினிகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், ரஜினிகுமாரியின் வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ராணுவ வீரர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story