கோவில்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யக்கோரி அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டம்


கோவில்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யக்கோரி அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 9:30 PM GMT)

கோவில்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யக்கோரி தஞ்சையில் அறநிலையத்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறையின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் பிரசாரத்தை கண்டித்தும், அறநிலையத்துறையின் பணியினை விளக்கியும் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு அறநிலையத்துறை ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகி கோவிந்தராஜூ தலைமை தாங்கினார். திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கண்ணன், தணிக்கையாளர் சங்க நிர்வாகி பாலச்சந்தர், அறநிலையத்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், முதுநிலை திருகோவில் பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க முன்னாள் மாநில பொருளாளர் மணவழகன், ஓய்வு பெற்றோர் சங்க தஞ்சை மண்டல தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் போராட்டம் குறித்து ஓய்வு பெற்றோர் சங்க மாநில நிர்வாகி கோவிந்தராஜூ கூறுகையில், “அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோவில்களுக்கு இரவுக்காவலர்கள் இல்லை. அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வில்லை. அதனை உடனடியாக செய்ய வேண்டும். ஒரு செயல் அலுவலரின் பொறுப்பில் 25-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் காலி இடங்கள் இருப்பதால் 20-க்கும் மேற்பட்ட கோவில்களில் கூடுதல் பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆய்வாளர்கள் தங்களது வழக்கமான பணிகளை விட 200-க்கும் மேற்பட்ட அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படாத கோவில்கள் அனைத்திலும் தக்கராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிலில் களவு மற்றும் அசம்பாவிதம் நடைபெற்றால் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், கோவில் செயல் அலுவலர், நிர்வாகியை விசாரணை நிலையியேயே கைது செய்து சிறையில் அடைப்பதும் எப்போதோ நடைபெற்ற நிகழ்வுக்கு தற்போது பணியில் உள்ள அலுவரை கைது செய்வதும் ஏற்புடையது தானா?

தவறு செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு தவறு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் நிரபராதி என தெரியவந்தால் அவர் அடைந்த அவனமானங்களையும், மன உளைச்சலையும் யார் எப்படி ஈடு செய்ய முடியும், ஒரு சில நிகழ்வுகள் உண்மையா, இல்லையா என்று விசாரணை முடிவு தெரிவதற்கு முன்னே ஒட்டு மொத்தமாக அறநிலையத்துறையை களங்கப்படுத்த நினைப்பது சரியா”என்றார். 

Next Story