ஆண்டிப்பட்டி அருகே துணிகரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு


ஆண்டிப்பட்டி அருகே துணிகரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 20 May 2018 4:30 AM IST (Updated: 20 May 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் வைகை அணை சாலையில் வசித்து வருபவர் அம்மாவாசை (வயது49). இவர், பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மாவாசை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டுக்குள் இருந்த 4 பீரோக்களை உடைத்து பணம், நகை, பொருட்களை கொள்ளையடித்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் பென்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் திருப்பதி சென்ற அம்மாவாசைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தனர். வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடுபோனது என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்மாவாசை திருப்பதியில் இருந்து திரும்பி வந்தவுடன் தான் எவ்வளவு திருடு போனது என்பது குறித்து தெரியவரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இந்த நிலையில், தற்போது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே திருட்டு நடந்திருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story