சேலம் அஸ்தம்பட்டியில் சிறப்பு முகாம்: ரூ.2.25 கோடி வரி வசூல்


சேலம் அஸ்தம்பட்டியில் சிறப்பு முகாம்: ரூ.2.25 கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 19 May 2018 10:32 PM GMT (Updated: 19 May 2018 10:32 PM GMT)

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் ரூ.2.25 கோடி வரி வசூல் செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

முகாமில் புதிய கட்டிடத்திற்கான சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு, பாதாள சாக்கடை வைப்புத் தொகை, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இதனை தொடர்ந்து சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாறுதலுக்காக விண்ணப்பித்த 14 பேருக்கும், காலி மனை வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 4 பேருக்கும், புதிய சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 4 பேருக்கும் என மொத்தம் 22 பேருக்கு விண்ணப்பித்த உடனே பரிசீலனை செய்து, உரிய ஆணைகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார். மேலும் புதிய வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் கட்டிட வரைபட அனுமதி கோரி உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது பரிசீலனை செய்து, 7 நாட்களுக்குள் உரிய ஆணைகளை வழங்கிடுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார். சிறப்பு முகாமில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 22 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

முகாமில் செயற்பொறியாளர்கள் அசோகன், கலைவாணி, உதவி ஆணையாளர் கோவிந்தன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் செந்தில்குமார், உதவி வருவாய் அலுவலர் முருகேசன், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story