விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா? - புதிய தகவல்கள்


விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா? - புதிய தகவல்கள்
x

திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

13 வருடங்கள் இனிய இல்லற வாழ்க்கை நடத்திய ரித்திக்ரோஷன்-சூசன் ஆகியோரின் விவாகரத்து இந்தி திரை உலகத்தையே அதிரவைத்தது. அமீர்கான்-ரீனா தத், சையப் அலிகான்-அம்ரூதா சிங் என ஏராளமான பிரபலங்களும் இல்லற உறவை முறித்துக்கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். ‘தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.

ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜான்காட்மேன், தம்பதிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றி பட்டியலிடுகிறார். ‘அன்பாக, அனுசரனையாக பேச பெரும்பாலான தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ஒருவரை ஒருவர் குறை சொல்வது கூட பெரிய விஷயமல்ல. மற்றவர் முன் குறை சொல்வதுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை உறவைப் பலப்படுத்தவும் செய்யும், பாழ்படுத்தவும் செய்யும். மோசமான பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒருவரை ஒருவர் உடல் குறைபாடுகளைப் பற்றி இழிவாகப் பேசுவது, மற்றவர்கள் முன் அவமதிப்பது, பாதுகாப்பை பறிப்பது, சந்தேகப்படுவது போன்ற பேச்சுவார்த்தைகள் வாக்குவாதத்தில் முடியும்.

சண்டை போட்டு முடிந்த பின்பு சிந்திப்பதும், சமாதானம் செய்வதும் அதிகப் பலனை தராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது முக்கியமல்ல. அந்த பேச்சுவார்த்தை எதில் போய் முடிகிறது என்பது தான் முக்கியம். குடும்ப விஷயங்களை பேசும்போது பிரச்சினைக்குரிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் இடையே அறிமுகமாகும் வேற்றுநபரால் பிரச்சினை ஏற்படக்கூடும். அந்த வேற்றுநபர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மாவாகக் கூட இருக்கலாம். அவர்கள் நன்மை செய்பவராகவே இருக்கலாம். ஆனால் தன்னை விட வேறுநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது உறவுகளுக்கு இடையில் பிரச்சினை தோன்றுகிறது’ என்கிறார், ஜான் காட்மேன்.

தொலைக்காட்சி நடிகை சுபாங்கி ஆத்ரே சொல்கிறார்:

‘‘சினிமா, தொலைக்காட்சி நடிகைகளை பொறுத்தவரை திருமண வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமுமில்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். பெண்களில் நிறைய பேர் சந்தேகத்திற்குள்ளாகிறார்கள். தேவையில்லாமல் துணை ஏற்படுத்தும் சந்தேகத்தால் திருமண முறிவுகள் அதிகரிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்தான்! திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டவர்கள் விவாகரத்தில் இருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். என்னோடு வேலை செய்யும் பலருடைய பிரச்சினை இது தான். கணவன் - மனைவி இடையே நம்பிக்கை இன்மையால் வாழ்க்கை துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த விஷயத்தில் என் கணவர் அப்படி அல்ல. அவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிரச்சினைக்குரிய விஷயங்களை ஓரங்கட்டிவிடுகிறது’’ என்கிறார்.

மனநல மருத்துவர் பூஜா ஆனந்த் சர்மாவின் கருத்து பெண்களும் விவாகரத்துக்கு ஒருவகையில் முக்கிய காரணமாகிவிடுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.

‘‘முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது’’ என்கிறார், பூஜா.

அவசரகதியில் தம்பதியர் எடுக்கும் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக செய்துவிடும் என்கிறார் தொலைக்காட்சி நடிகை வந்தனா பதாக். அவர் சொல்கிறார்: ‘‘இப்போது எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம். இதுவும் கணவன் - மனைவி பிரிவுக்கு காரணம். அவர்கள் குடும்பத்திற்கென்று நேரத்தை ஒதுக்கினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தன் காலில் தானே நிற்கும் பலம் இருக்கும் தைரியத்தில் இன்று திருமண வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டால் நாளை தனிமை என்னும் பயங்கரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாகரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். மனதாலும் சரி உடலாலும் சரி அந்தப் பாதிப்புகள் உடனே வெளியே தெரியாது. அது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். படித்தவர்கள் கூட இதுபற்றி யோசிப்பதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்’’ என்கிறார்.

Next Story