தொழில் அதிபருக்கு கத்திக்குத்து வழக்கு: 5 வாலிபர்கள் கைது
தொழில் அதிபருக்கு கத்திக்குத்து வழக்லில் 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த காந்தி மகன் கார்த்தி (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தெருவில் மோட்டார்சைக்கிளில் அங்கும் இங்குமாய் பந்தயத்தில் செல்வதுபோல் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் நந்தீஸ்வரன் (31) என்பவர் கார்த்தியை தடுத்து நிறுத்தி, ஏன் இப்படி வேகமாக செல்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கிருந்து சென்ற கார்த்தி தனது நண்பர்கள் விக்னேஷ்வரன் (21), பில்கிளிண்டன் (21) மற்றும் 19, 20 வயதுடைய 2 பேர் ஆகியோருடன் சேர்ந்து வந்து நந்தீஸ்வரனை அடித்து உதைத்துள்ளார்கள். மேலும் கார்த்தியும், பில்கிளிண்டனும் நந்தீஸ்வரனின் இடுப்பு, கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 5 பேரும் ஓடிவிட்டார்கள். படுகாயம் அடைந்த நந்தீஸ்வரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் வலைவீசி தேடி வந்தார்கள். இதுசம்பந்தமாக 19 வயதுடைய வாலிபரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் கோபி பங்களாப்புதூர் ரோட்டில் போலீசார் நேற்று ரோந்து சென்றார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி 4 பேர் மோட்டார்சைக்கிளோடு நின்று கொண்டிருந்தார்கள். இதனால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் நந்தீஸ்வரனை கத்தியால் குத்திய கார்த்தி, விக்னேஷ்வரன், பில்கிளிண்டன், 20 வயதுடைய வாலிபர் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் கார்த்தியின் மோட்டார்சைக்கிளும் அவர்களிடம் இருந்து 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.