வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3,243 கோடி பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது


வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3,243 கோடி பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 20 May 2018 10:00 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 3 ஆயிரத்து 243 கோடி பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணம் நகர ஏ.ஆர்.ஆர்.ரோட்டில் அ.தி.மு.க. கொடியை அமைச்சர் துரைக்கண்ணு ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மதகடித்தெரு, மகாமககுளம், புதிய பஸ் நிலையம், பக்தபுரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இதில் நகர செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அறிவழகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதா பேரவை செயலாளர் அயூப்கான், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முத்துராஜா, கவுரிசங்கர், துரைராஜ், ஜான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் 34 அடி தான் தண்ணீர் இருக்கிறது. இயற்கையும் சோதனை செய்கிறது. மழை பெய்யவில்லை. வட கிழக்கு பருவ மழை உரிய நேரத்தில் பெய்யும் என கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் காவிரி பிரச்சினையில் கடும் நடவடிக்கை எடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

தண்ணீர் கிடைக்கும்

விரைவில் கர்நாடகா அரசிடமிருந்து தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் அதிகரிக்கும். விரைவில் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 243 கோடி பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story