ஓசூர், மத்திகிரி பகுதிகளில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் முறிந்து விழுந்தன


ஓசூர், மத்திகிரி பகுதிகளில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

ஓசூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஓசூர் பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையின்போது, கற்களை போன்று சரமாரியாக விழுந்த ஆலங்கட்டிகளை, சிறுவர்கள் கைகளில் எடுத்து வைத்து கொண்டு விளையாடினர்.

ஓசூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையினால், தேர்பேட்டை பகுதியில் 3 பழமையான மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடமாடுவதற்கு சிரமப்பட்டனர். இதேபோல் ஓசூர் அருகே காமன்தொட்டியிலும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

மத்திகிரி

மத்திகிரி, அந்திவாடி, பெலகொண்டப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த காற்றுக்கு சாலையோரம் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தன. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.


Next Story