தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 21 May 2018 4:30 AM IST (Updated: 21 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி. மு.க. சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அ.தி.மு.க. தகவல் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைந்து நடத்தும் இந்த போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 258 அணிகள் முன்பதிவு செய்திருந்தன. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும் இந்த போட்டிகள் தொடக்க விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி. அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில கழக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி வி.வி.ராஜ்சத்யன் வரவேற்று பேசினார். மாநில நிர்வாகிகள் எஸ்.டி.தர்மேஷ்குமார், பிரசாத், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான பி.தங்கமணி கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் எதிர்காலத்தில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் அ.தி.மு.க. மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் கட்சியாக விளங்கி வருகிறது என்றார்.

விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார். பின்னர் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் 3 அமைச்சர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் பேட்டிங் செய்து போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் பேரவை மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, நகர செயலாளர் குருநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார். 

Next Story