பா.ஜ.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்


பா.ஜ.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 21 May 2018 4:30 AM IST (Updated: 21 May 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

திருச்சி,

கர்நாடகா தேர்தலில் மக்கள் முடிவை மதிக்காமல் அதனை மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டது. நாடு முழுவதும் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சித்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. சகல விதமான சாகசங்களையும் செய்தது அம்பலமாகி உள்ளது. தற்போது கர்நாடகாவில் புதிய அரசு அமையும் நிலையில் காவிரி பிரச்சினையை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படுகிற மத்திய அரசு இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக கல்விக்கொள்கைகளை பா.ஜனதா அரசு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி வருகிறது.

சிறுபான்மையினர், ஆதி திராவிட மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தலின்போது அறிவித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்கள் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை வெற்று வாக்குறுதிகளாக அமைந்துவிட்டன. எனவே ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பா.ஜ.க. ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலும் அ.தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் திராவிடமணி, இந்திரஜித் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story