திருச்சி-சேலம் சிறப்பு ரெயில் கழிப்பறை வசதியுடன் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு


திருச்சி-சேலம் சிறப்பு ரெயில் கழிப்பறை வசதியுடன் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 9:49 PM GMT)

திருச்சி-சேலம் சிறப்பு ரெயில் கழிப்பறை வசதியுடன் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருச்சி,

திருச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9.30 மணிக்கு கரூருக்கு இயக்கப்படும் ரெயில் சேலம் வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பு பயணிகள் ரெயிலாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திருச்சி மற்றும் கரூரில் இருந்து சேலம் செல்பவர்கள் பெருமளவு இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் திருச்சி-சேலம் இடையே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் இருந்தும் பயணிகள் இந்த ரெயிலில் பயணிக்கின்றனர். இதனால் சிறப்பு பயணிகள் ரெயில் சேவையை வருகிற ஆகஸ்டு மாதம் வரை நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி ரெயில் சேவை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி-சேலம் பயணிகள் ரெயிலில் கழிப்பறை வசதி இல்லாதது பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. திருச்சியில் இருந்து ரெயில் புறப்பட்டதும் வழியில் ரெயில் நிலையங்களில் ஓரிரு நிமிடங்கள் மட்டும் நின்று செல்கிறது.

சேலத்திற்கு பகல் 1.20 மணி அளவில் சென்றடைகிறது. கழிப்பறை வசதி இல்லாததால் சிறுவர், சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் அவதி அடைந்து வருகின்றனர். ஓடும் ரெயிலில் பயணத்தின் போது இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் பெரும் சிரமம் அடைகின்றனர்.

நீண்ட தூரம் செல்லக் கூடிய பயணிகள் ரெயில் கழிப்பறை வசதியுடன் கடந்த சில வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி-மன்னார்குடி, மானாமதுரை, கடலூர் உள்ளிட்ட பயணிகள் ரெயில் கழிப்பறை வசதியுடன் கூடிய ‘டெமு‘ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல திருச்சி-சேலம் சிறப்பு பயணிகள் ரெயிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய ரெயிலாக இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிப்பறை வசதியுடன் கூடிய 3 ‘டெமு‘ பயணிகள் ரெயில் சென்னை ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திருச்சிக்கு என தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ரெயிலை விரைவில் பெற்று திருச்சி-சேலம் இடையே சிறப்பு ரெயிலில் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story