குடிநீர் கேட்டு சாலை மறியல்: மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்


குடிநீர் கேட்டு சாலை மறியல்: மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-21T03:20:21+05:30)

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு பகுதியில் சாலை மறியலும் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக நகர் பகுதியில் குடிநீருக்காக அவ்வப்போது சாலை மறியல் நடக்கிறது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கோபால்நகருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 20 நாட்களுக்கு பிறகு நேற்று அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 1½ மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக தெரி கிறது.

ஆனால் அந்த தண்ணீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்துள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் ஆர்த்தி தியேட்டர் ரோடு பிரிவில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறினர். மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி 2 நாட்களுக்குள் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நடந்துகொண்டு இருக்கும் போதே, குமரன் திருநகர், நாராயணதாஸ் நகர் பொதுமக்கள் ரவுண்டுரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே காலிக்குடங்களுடன் திரண்டனர்.

மேலும் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி மேல்நிலை தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story