சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு உள்ளது - டி.டி.வி.தினகரன்


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு உள்ளது - டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 20 May 2018 11:43 PM GMT (Updated: 20 May 2018 11:43 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு உள்ளது என்று சேலத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று சேலம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

அண்ணன், தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல. அவருக்கும், எனக்கும் எந்தவித சொத்து தகராறும் இல்லை. துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அவர் ஏஜெண்டாக செயல்படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.

கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல், பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம். 104 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அங்கு ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனி அங்கே பா.ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது. யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பம் இருந்த போது சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே, முறையான கொள்கை, நிபந்தனைகளை ஏற்படுத்தி வைத்து உள்ளார். அதில் பொதுச்செயலாளருக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்வார்கள். இது குறித்து எங்கள் தரப்பு வாதங்களை கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம்.

இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்களிடம் வருவார்கள். தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. யாரால்  பதவிக்கு வந்தோம் என்பதை எடப்பாடி பழனிசாமி எண்ணி பார்க்க வேண்டும். பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்த இவர் மக்களுக்கு என்ன நன்மை செய்யப்போகிறார். சேலத்தில் விவசாயிகளை நசுக்கி பசுமை வழிச்சாலை கொண்டு வரும் திட்டம் தேவை இல்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பலர் மாற்று கட்சியில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

Next Story