வங்கியில் பணத்தை செலுத்த உதவுவதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் ரூ.10 ஆயிரம் மோசடி


வங்கியில் பணத்தை செலுத்த உதவுவதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் ரூ.10 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தை வங்கியில் செலுத்த உதவுவதாக கூறி பிளஸ்-2 மாணவியிடம் ரூ.10 ஆயிரத்தை மோசடி செய்து விட்டு தப்பியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் பணம் செலுத்துவதற்காக மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த கவுசல்யா (வயது 18) என்ற பிளஸ்-2 மாணவி தனது தங்கையுடன் நேற்று மதியம் வந்தார்.

அப்போது வங்கியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தான் வங்கி அதிகாரி என கூறி மாணவி கவுசல்யாவிடம் அறிமுகமானார். பின்னர் வங்கியில் பணம் போடுவதற்காக மாணவி வந்ததை அறிந்த அவர், மாணவியிடம் பணம் போடுவதற்கான வங்கி செலான், மற்றும் ரூ.10 ஆயிரத்தை கவுசல்யாவிடம் இருந்து நைசாக பேசி வாங்கி கொண்டு தப்பி சென்றுள்ளார்.

ஆனால் மாணவி அவர் வங்கியில் பணத்தை செலுத்திவிட்டு வருவார் என காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பி வராததால், இது குறித்து வங்கியில் மாணவி விசாரித்ததில், அந்த நபர் ஏமாற்றி பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவி கவுசல்யா மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story