குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கூ.குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சேரி காட்டுவளவு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காடையாம்பட்டியில் அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், கூ.குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று மதியம் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது, காடையாம்பட்டி அருகே கூ.குட்டப்பட்டி கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், அதை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுசம்பந்தமாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்திருப்பதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

வருவாய் அலுவலரிடம் மனு

ஆனால் கூடமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி சென்றிருந்ததால் அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து பெண்கள் மனு கொடுத்தனர். அப்போது, அவர் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுகுறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறியதாவது:-

காடையாம்பட்டி அருகே கூ.குட்டப்பட்டி ஊராட்சி காஞ்சேரி காட்டுவளவு பகுதியில் குடிநீர் வசதி இல்லை. பொது குழாய்கள் எதுவும் இதுவரை அமைக்கவில்லை. மேட்டூர் தண்ணீர் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். கிராமத்தில் ஆழ்துளை கிணறு இல்லாததால் 1 ½ கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே தண்டவாளத்தை கடந்து டேனிஷ்பேட்டையில் தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story