சமூகநீதிக்கு மரண அடி


சமூகநீதிக்கு மரண அடி
x
தினத்தந்தி 22 May 2018 7:31 AM (Updated: 22 May 2018 7:31 AM)
t-max-icont-min-icon

இந்திய குடிமை நிர்வாகத்தில் முதன்மையான பங்கு வகிப்பது ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். என்பது போன்ற முக்கிய பெரும் மேலாண்மை ஆட்சிப் பணிகள் ஆகும்.

 யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இப்பணிகளுக்குரிய தேர்வினை நடத்தி, இறுதியில் நேர்காணலும் நடத்தி அவர்களைத் தேர்வு செய்கிறது. தொடக்கக் கட்டம், பிறகு முக்கிய பகுதித் தேர்வு, பிறகு நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் தேர்ச்சி பெற்ற பிறகே அரசாணை வழங்கி, அவர்களை பயிற்சிக்கு அனுப்புகிறது. இதுவரை இந்த நடைமுறைதான் செயலில் இருந்து வருகிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலான பிறகு, பிற்படுத்தப்பட்டவர்கள் இதில் ஓரளவு 27 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி இப்பதவிகளைப் பெறும் வாய்ப்புப் பெற்று சமூகநீதிக் கொடி அத்துறையில் ஏற்றப்பட்டது. அதாவது கீழ்மட்டத்தில், நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளும் கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பில் தேர்வு பெற்றனர்.

கீரை, காய்கறிகள் விற்கும் தாயின் பிள்ளை, கிராமத்தில் விவசாயப் பணிகளும், வீட்டு வேலைகள் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளும்கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகி சாதனை படைத்த வரலாறு அண்மைக் காலத்தில், அதாவது 1991-ம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. இதற்கு முழுமுதற் காரணம் பிரதமராக இருந்த வி.பி.சிங்கும், அவரது அமைச்சரவை சகாவான ராம்விலாஸ் பஸ்வானும் ஆவர்.

மண்டல் கமிஷன் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்து, ஆதரித்து முன்மொழிந்து பிரமதர் இந்திரா காந்தி ஆட்சியில், நாடாளுமன்றம் இரவு 12 மணிவரை இந்த விவாதத்தை நடத்தி, சமூகநீதி அரசியல் சட்டம் அளித்துள்ளதை எவரும் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என்பதோடு, இதுபற்றி மாறுபட்ட நிலைப்பாட்டினை எடுக்க முடியாது என்ற வரலாற்று முக்கியத் தீர்மானம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மத்திய அரசின் துறைகளுக்கு இருந்த காரணத்தால் அதே அளவுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களுக்கான பதவிகளில் பெரும் அளவுக்கு (ஒதுக்கீட்டின் முழு அளவுக்கு வராவிட்டாலும்கூட) ஏதோ பெற்றுச் சென்றனர்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மக்கள் தொகையில் 65 முதல் 70 விழுக்காடு இருக்கிறார்கள். அவர்களின் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு தரப்படவில்லை; மாறாக, 27 சதவிகிதம்தான் சட்டப்படி ஒதுக்கப்பட்டது. நடைமுறையில் இந்த 27 சதவிகிதம் தரப்படாமல் வெறும் 11 முதல் 12 சதவிகிம் வரைதான் தரப்பட்டுள்ளது. இதுவே ஒரு பெரும் சமூக அநீதி.

அரசியல் சட்டத்தினையே புறக்கணித்த செயல் அப்பட்ட வீதி மீறலே! இப்போது இந்த அளவு சமூகநீதியையும் அறவே பறித்து, கிராமப்புற, ஏழை, எளியவர்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் முதல், இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தோரும், மகளிருக்கும் தலையில் இடி விழச் செய்வது போன்ற ஒரு கொடுமையான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது, ஒரு பெரும் கதவடைப்பு, தடுக்கும் சூழ்ச்சியும் ஆகும்.

முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு, இந்த மூன்று தேர்வுகளுக்குப் பிறகு இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு மூன்று மாதப் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பிறகு பணி நியமனம் என்பதுதான் தற்போதைய நடைமுறை. இப்பொழுது என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

முசோரியில் நூறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின் மறுபடியும் தேர்வு நடத்தப்பட்டு (நேர்முகத் தேர்வு உள்பட), அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் படுத்துவார்களாம். எந்தெந்த பணிகள் யார் யாருக்கு? எந்தெந்த மாநிலத்தில் பணி நியமனம்? என்று நிர்ணயம் செய்யப்படுமாம்!

எத்தனை எத்தனைத் தேர்வுகளைத்தான் நடத்துவது? பிளஸ்-2 தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதனைத் தூக்கி எறிந்துவிட்டு, ‘நீட்’டில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் என்பது போன்ற சூழ்ச்சித் திட்டமே இது.

பயிற்சி அளிப்பவர்கள் யார்? பயிற்சி முடிந்து நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் யார்? இதில் வெளிப்படைத் தன்மை மிகவும் குறைவு. அரசியல் தலையீடு, உயர் சாதி தலையீடுகளுக்கு அதிக வாய்ப்புண்டு.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட சுகுதேவ் தோரட் விசாரணைக் குழுவிடம் அங்குப் பயிலும் தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்கள் சொன்னது என்ன? உள்மதிப்பீட்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்று சொல்லவில்லையா?

சாதிய மனப்பான்மை கொண்ட ஓர் சமூகத்தில் இதைப்பற்றி எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டாமா? இப்பொழுதுள்ள ஐ.ஏ.எஸ். தேர்வில்கூட முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு இவற்றில் அதிக மதிப்பெண் பெறாத உயர் சாதியினர் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வருவது எதைக் காட்டுகிறது? (இதில் உள்ள ரகசியம் தெரிந்ததே!) அதே நிலைதான் இதிலும் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்குமே!

இதே யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளில் ஓ.சி. என்பதை திறந்த போட்டி (ஓபன் காம்படிசன்) என்பதற்குப் பதிலாக ‘அதர் கம்யூனிட்டி’ என்று கூறி, பல ஆண்டுகள் சட்ட விரோதமாக நியமனங்கள் நடைபெறவில்லையா?

சென்னை டிரிபியூனல் (சி.ஏ.டி.), சென்னை உயர்நீதிமன்றம் அது தவறு என்று தீர்ப்பு வழங்கிய பிறகும், உச்சநீதிமன்றம் சட்ட விரோதமாக, சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கியதால், பல ஆண்டுகள் திறந்த போட்டிக்கான இடங்கள் அனைத்தும் உயர் சாதியினருக்கே சென்றுவிடவில்லையா?

மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜனதா, இப்பொழுது மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால், இதுபோன்ற உயர் சாதியினர் ஆதிக்கம் பெறுவதற்கான யுக்திகளைக் கையாண்டு வருகிறது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள அவசர கதியில் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள சமூகநீதி சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து கடுமையாகப் போராடி இதனை முறியடிக்காவிட்டால், பல தலைமுறைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

கொள்கை முடிவுகள், செயல்படுத்துதல் போன்றவற்றில் மிக முக்கிய அங்கம் வகிக்கக் கூடிய ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற பதவிகளில் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பங்கு தட்டிப் பறிக்கப்படுமானால், 1925-ல் தந்தை பெரியார் எச்சரித்தபடி உயர்சாதிநாயகம் ஏற்படும். அந்த நிலையில், மிகப்பெரிய அளவில் புரட்சி வெடிக்கும். வன்முறையில் கொண்டு போய்விடும் என்று எச்சரிக்கிறோம்.

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

Next Story