போக்குவரத்து துறை அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் "மீம்ஸ்" போடுவதாக குற்ற சாட்டு போலீசார் விசாரணை
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் “மீம்ஸ்“ போட்டு நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டி கரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூரை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் அவரது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வாட்ஸ்–அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பற்றி அவதூறு கருத்து பரப்பும் வகையில் “மீம்ஸ்“ உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் வெளியிட்டு உள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையேயும், அமைச்சரின் ஆதரவாளர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்களான கரூர் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவசாமி(வயது 40) மற்றும் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார்(30) ஆகியோர் தனிதனியாக கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், சமூக வலைதளங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. மீது பொய்யான, அவதூறான கருத்துகளை பரப்பி வரும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் இந்த புகார்களின் அடிப்படையில் தனிதனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார். அமைச்சரின் வளர்ச்சியை பிடிக்காத சிலர் தான் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.