தென்மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்


தென்மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 4:30 AM IST (Updated: 23 May 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பருவமழை காலங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கங்களை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்து காட்ட வேண்டும். தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு படகுகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்படுபவர்களை புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்க பொதுப்பணித்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை வெள்ள காலங்களில் நீர் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின்கம்பங்கள் சாய்தல் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் சரிசெய்து சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை இருப்பில் வைத்திருக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களும், கூட்டுறவுத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குளங்கள், ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தன்மையுடன் உறுதியுடன் உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள், இதர நோய்களுக்கு ஏற்றபடி போதுமான அளவு மருந்துகளை இருப்பில் வைத்திருக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் சுழற்சி முறையில் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும். போக்குவரத்து துறையினர், அனைத்து வாகனங்களையும் பழுதுகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சார ஒயர்கள் நல்ல நிலையில் உள்ளதா? எனவும் பழுதடைந்த ஒயர்களை உடனுக்குடன் சரிசெய்ய மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story